மாவீரர் அஞ்சலிக்குக் கூடத் தடையா? கஜேந்திரன் குற்றச்சாட்டு


பேரினவாத அரசு தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடிமைகளாகவே நடத்தி வருவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளைக்கூடத் தடுத்து வருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் நடைமுறையிலுள்ள சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தபோது இனவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் திருகோணமலை மாவட்டத்தில் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகள் தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மொரவெவ பகுதிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றபோது, பெரும்பான்மை இனத்தவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல முடியும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சரொருவர் எழுத்துமூலமாகவும் கூட்டமொன்றின் மூலமாகவும் அனுமதி வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த அனுமதி இருந்தபோதிலும் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் கால்நடைகளும் பாதிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை, அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை தொடர்ந்து கேள்விக்குறியாக்கப்படுவதாகவும் செல்வராசா கஜேந்திரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

எனினும், கால்நடைப் பண்ணையாளர்கள் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பதில்களும் சுயாதீனமான உறுதிப்படுத்தல்களும் வெளியாகவில்லை.

No comments